இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு தேதி அறிவிப்பு …!!

அரசு, நகராட்சி, கள்ளர் சீரமைப்பு, ஆதிதிராவிடர் பள்ளிகள் உள்ளிட்ட அரசு நிர்வாகத்தில் உள்ள பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு சேர்வதற்கான போட்டித் தேர்வு ஜூலை மாதம் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா வெளியிட்டுள்ள ஆண்டுக்கான தற்காலிக செயல்திட்ட அட்டவணையில், வட்டாரக் கல்வி அலுவலர் பணியில் 97 பேரை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு 2019 நவம்பர் 27ஆம் தேதி வெளியிடப்பட்டது. இவர்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு பிப்ரவரி மாதம் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு 2019 நவம்பர் 27ஆம் தேதி வெளியிடப்பட்டது. இவர்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு மே மாதம் 2, 5ஆம் தேதிகளில் நடைபெறும்.

ஆசிரியர் பட்டம், பட்டயப் படிப்பு முடித்தவர்கள் ஆசிரியர் பணிக்காக நடத்தப்படும் தகுதித் தேர்விற்கான அறிவிப்பு மே மாதம் 4ஆம் தேதி வெளியிடப்படும். இடைநிலை ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு தாள் 1க்கான எழுத்துத் தேர்வு ஜூன் மாதம் 27ஆம் தேதியும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு தாள் 2க்கான எழுத்துத் தேர்வு ஜூன் 28ஆம் தேதியும் நடைபெறும்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியில் 497 பேரை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் 1ஆம் தேதி வெளியிடப்படும். அவர்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி அதன்பின் அறிவிக்கப்படும்.

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வு, தமிழகத்தில் உள்ள அரசு, நகராட்சி, மாநகராட்சி, கள்ளர் சீரமைப்பு, ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட அரசு நிர்வாகத்தின் கீழ் நேரடியாக செயல்பட்டு வரும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர்வதற்கு மீண்டும் போட்டி எழுத்துத் தேர்வினை எழுத வேண்டும்.

அதன் அடிப்படையில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் இடைநிலை ஆசிரியர் பணியில் 730 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இவர்களுக்கான அறிவிப்பு ஜூலை 9ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு தேதி அறிவிப்பு

அதேபோல் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையில் பாடம் நடத்துவதற்கான பட்டதாரி ஆசிரியர் பணியில் 572 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இவர்களுக்கான அறிவிப்பு ஜூலை மாதம் 17ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஏற்கனவே நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிபெற்ற தேர்வர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு மற்றும் பாடத்திட்டம் போன்றவற்றை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *