‘எந்த அழிவு திட்டத்துக்கும் இங்கு அனுமதி கிடையாது’ – முதலமைச்சர் நாராயணசாமி திட்டவட்டம்!!

எந்த நிலையிலும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை புதுச்சேரியில் அனுமதிக்கமாட்டோம் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

 நேதாஜி பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், காங்கிரஸ் கட்சித் தலைவர் நமச்சிவாயம் தலைமையில் கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். மேலும், முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தேசிய செயலாளர் சஞ்சய் தத் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், “மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஜனநாயகத்திற்கு என்று ஒரு மரியாதை இருந்தது. பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காடாக உயர்ந்து தொழிற்சாலைகளும் அதிகமாகத் திறக்கப்பட்டன. ஆனால், தற்போது பாஜக ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி இல்லை; ஏற்றுமதியும் குறைந்துவிட்டது. இதுகுறித்து பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் கவலையில்லை. மத்தியில் ஆளும் அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்; இஸ்லாமியர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்துகிறது. இதனையும் மீறி சட்டத்தை அமல்படுத்தும் என உள்துறை அமைச்சர் கூறுவது கண்டிக்கத்தக்கது.

புதுச்சேரி அரசின் ஏ.எப்.டி. மில் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வூதியம் கொடுக்க அரசு கேட்டால், அதனை மூடச்சொல்லி துணைநிலை ஆளுநர் அலுவலர்களை மிரட்டுகிறார். தொடர்ந்து அரசுக்கு எதிராக அராஜகம் செய்யும் கிரண்பேடி மாநிலத்துக்கு தேவையில்லை எனப் பிரதமரிடம் கூறினால், அவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். அரசின் தொழிற்சாலையை மூடும் உத்தரவை குடியரசுத் தலைவர் தான் தர வேண்டும்.

அவர் கொடுக்கவேண்டிய உத்தரவின்படி கிரண் பேடி வெளியிடுகிறார். மக்களுக்கு துரோகம் செய்யும் கிரண்பேடி அதனைத் திரும்பப் பெற வேண்டும். ஏ.எப்.டி மில்லை மூடக்கூடாது தற்போதைய நிலையே தொடர வேண்டும் என கிரண்பேடி கடிதம் அளிக்கப்பட்டுள்ளது” என்றார். மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகளின் உணர்வுகளை மதிக்கவில்லை என்று கூறிய அவர், எந்த அழிவு திட்டத்துக்கும் புதுச்சேரியில் அனும்தி கிடையாது என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *