கொரோனா வைரசுக்கு தற்போது வரை மருந்து கண்டுபிடிக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை மீண்டும் கூடிய நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா பரிசோதனையை அனைவரும் எடுக்க வேண்டிய தேவை இல்லை என்றும் இருமல், சளி, காய்ச்சல் இருந்தால் மட்டுமே மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி ரத்த மாதிரிகள் எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கொரோனா வைரசுக்கு தற்போது வரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. ராஜிவ் காந்தி மருத்துவர்கள் கிங் ஆராய்ச்சி மருத்துவர்கள் கொரோனா வைரஸுக்கான மருந்து குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் நல்ல செய்தி வரும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கென தனியாக மருந்து கண்டுபிடிக்கவில்லை. சளி, இருமல் மருந்து தான் தற்போது கொடுக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவ மனையிலும் கொரோனா கண்டறியும் ஆய்வு மையங்கள் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.