நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் சிலரின் உடல்கள் ஒரே இடமான கிறிஸ்ட் சர்ச் நினைவுப் பூங்காவில் புதைக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை ஏராளமான மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கியுடன் மசூதியில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கண்மூடி தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி சூடுக்கு காரணமான முக்கிய குற்றவாளி ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பிரெண்டன் டாரன்ட் என்பவர் கைது செய்யப்பட்டதையடுத்து அடுத்த மாதம் 5-ம் தேதி சிறையில் அடைக்கப்படுவான் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களில் முதற்கட்டமாக 6 பேரின் சடலங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் சூழ அடுத்தடுத்து கிறிஸ்ட் சர்ச் நினைவுப் பூங்காவிற்கு எடுத்து வரப்பட்டது. பின்னர் சடலங்கள் அனைத்தும் புதைக்கப்பட்டு அங்கேயே இறுதிச்சடங்கும் நடைபெற்றது. அப்போது அங்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த வந்தவர்களுக்கு பாதுகாப்பு தரும் வகையில் துப்பாக்கியுடன் எராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் அடுத்தடுத்து துப்பாக்கி சூட்டில் பலியான பலரின் சடலங்களும் கிறிஸ்ட் சர்ச் நினைவுப் பூங்காவில் புதைக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.