அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சேலம் ரயில் நிலையம் மேம்படுத்தப்பட இருக்கிறது. மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் இதற்கான பணிகளை நேரில் சென்று பார்வையிட்ட ஆய்வு செய்தார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் விதமாக 75 ரயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் உள்கட்ட அமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தொழில் முனைவோர் பயன் பெரும் விதமாக சரக்கு ரயில் போக்குவரத்து மேம்படுத்தப்பட இருக்கிறது.
இந்நிலையில் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்கும் விதமாக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றது. தமிழகத்தில் தேவைப்படும் இடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார். வருகிற ஏப்ரல் எட்டாம் தேதி முதல் சென்னை டு கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பயன்பாட்டிற்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அதனை தொடர்ந்து சேலம் ரயில் கோட்டத்தில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்திய பின் புதிய ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலமாக சேலத்தை சேர்ந்த தொழில் முனைவோர் பயனடைகின்றனர். மேலும் அசல் பட்டு சேலைகள், பருத்தி புடவைகள் இந்த பகுதியில் அதிக அளவில் தயார் செய்யப்படுவதினால் நெசவாளர்களுக்கு பலன் கிடைக்கிறது. பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் சரக்கு முனையம் மேம்படுத்தப்பட்டிருப்பதால் சரக்கு ரயில் போக்குவரத்து நாடு முழுவதும் அதிகரித்து உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.