“புதிய அமைச்சரவை கூட்டம்” மோடி தலைமையில் நடைபெற்றது…!!

பதவியேற்ற புதிய மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கூட்டணி மத்தியில் மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி தலைமையில் 58 பேர் கொண்ட புதிய மத்திய அமைச்சரவை பொறுப்பேற்றது. இந்நிலையில் புதிதாக பதவியேற்ற மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று  நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும் ,  நாடாளுமன்ற கூட்டத் தொடர் மற்றும் மத்திய பட்ஜெட் குறித்தும், வருகின்ற 100 நாட்களில் செயல்படுத்த வேண்டிய முக்கிய திட்டங்கள் குறித்தும் இந்த  கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதில் விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் புதிய திட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாகவும் ,  தேசிய பாதுகாப்பு ஊக்கத் தொகையை மாநில காவல்துறைக்கும் விரிவாக்கம் செய்து குறித்தும் இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது . அதோடு  வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் உள்ள வாரிசுகளில் ஆண் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகையை 2,500 ரூபாயாகவும், பெண் குழந்தைகளுக்கு 3,000 ரூபாயாகவும்  உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த நிதி தேசிய பாதுகாப்பு நிதியில் இருந்து ஆண்டுக்கு 500 பேருக்கு வழங்கவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.