காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடி புத்திசாலித்தனமாக முடிவு எடுத்திருப்பதாக தேமுதிக பிரேமலதா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா அத்திவரதரை தரிசனம் செய்தார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், காஷ்மீர் பிரச்சனை இன்று இந்தியா மட்டுமல்லாமல் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இதில் மாற்றுக் கட்சிகள் ஒவ்வொருவரும் ஓவ்வொரு கருத்தைச் சொன்னாலும், இந்தியாவின் சுதந்திரத்திற்கு இனிமேல் இது சிறந்ததாக இருக்கும் என்பதே தேமுதிகவின் கருத்து என தெரிவித்தார்.

இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இந்த கஷ்மீர் பிரச்சினை ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக நடைபெற்று வருகிறது. இதற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க கூடிய வகையில் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. எங்களைப் பொருத்தவரை இது வரவேற்கக் கூடிய விஷயம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தைரியமாக ஒரு புத்திசாலித்தனமான முடிவை எடுத்துள்ளார் என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்தியாவின் பாதுகாப்புக்கு இனிமேல் மிகப்பெரிய அச்சுறுத்தல் இல்லாமல் நாட்டை பாதுகாக்க முடியும் என்றும், சீனாவினுடைய ஆக்கிரமிப்பு பாகிஸ்தானினுடைய ஆக்கிரமிப்பு உள்ளிட்டவைகளுக்கு தடை வழங்க முடியும் என்றும் தெரிவித்த அவர், பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைவதற்கான வழிவகையை இம்மசோதா ஏற்ப்படுத்தும் என தெரிவித்தார்.