நாடு முழுவதும் சுமார் 50 கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டும் சாமர்த்தியமாக தப்பி வந்த திருடர்கள், நண்பருக்கு அளித்த பிறந்தநாள் பரிசால் மாட்டிக்கொண்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. திட்டமிட்டு காய்நகர்த்தி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் செய்த பெரிய தவறால் தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

தானே மத்திய சிறைச் சாலையில் கொள்ளை, வழிப்பறி குற்றங்களுக்காக அடைக்கப்பட்ட லஷ்மண், விஷ்ணு ஆகிய இருவரும் நண்பர்களாக மாறினர். சிறையில் இருந்து வெளியே வந்த இரண்டு பேரும் கூட்டு சேர்ந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டனர். பராமரிப்பு வேலைகள் நடந்துவரும் வீடுகளை குறிவைத்து இவர்கள் கொள்ளையடிப்பது வழக்கம் ஆகும்.

நள்ளிரவு வேளையில் கருப்பு ஆடைகளை அணிந்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்து பொருள்களை கொள்ளையடித்து வந்தனர். இதனிடையில் சிசிடிவி கேமராக்களிலும் இவர்களது உருவங்களை அடையாளம் காண முடியாமல் காவல்துறையினர் திகைத்து வந்தனர். இந்நிலையில் வீட்டிலிருந்து கொள்ளைபோன கைப்பேசி ஒன்றில் புது சிம் போடப்பட்டு பயன்படுத்தப்படுவதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

அந்த எண்ணை வைத்திருப்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தபோது, அவருக்கு கொள்ளையர்கள் பிறந்தநாள் பரிசாக இந்த கைப்பேசியை அளித்திருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவர் அளித்த தகவலின்படி கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அதன்பின் விசாரணையில் அவர்கள் பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.