தைப்பூசத் திருநாளை முன்னிட்டு முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டத்தில் குமாரசாமிபேட்டை என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆகம விதிகளின் படி கோவில் வளாகத்திலேயே வாகனங்களில் சுவாமி உலா வந்தார். இதனையடுத்து தைப்பூச நாளான நேற்று பல்வேறு வாசனை திரவியங்களால் தீபாரதனை நடைபெற்றது. மேலும் கொரோனா நோய் பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் இன்றி விழா நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இரவு சுவாமிக்கு திருக்கல்யாணம் நிறைவு பெற்றதை தொடர்ந்து மயில் வாகனத்தில் உற்சவம் நடைபெற்றது. அதோடு புதன்கிழமையான இன்று விநாயகர் தேரோட்டமும், யானை வாகன உற்சவம் நடக்க இருக்கின்றது. மேலும் நாளை தேரோட்டம் நடக்க இருப்பதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அதன்படி காலை 7 மணிக்கு பெண்கள் மட்டும் வடம்பிடிக்கும் தேரோட்டமும், 4 மணிக்கு பக்தர்கள் வடம் பிடிக்கும் தேரோட்டம் நடைபெற இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.