பட்டப்பகலில் நடந்த கொடூர சம்பவம்… அடுத்தடுத்து கொலைகள்… சென்னையில் பரபரப்பு…!!

காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே பட்டப்பகலில் மீனவரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள அப்பர் சாமி கோவில் தெருவில் நாராயணன் என்ற மீனவர் வசித்து வருகிறார். இவரின் மீது கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவரது மனைவி கல்பனா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நாராயணன் தனது மனைவியை பார்த்து விட்டு, காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு 6 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவரை சுற்றிவளைத்து விட்டனர்.

இதனை பார்த்ததும் நாராயணன் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்தார். ஆனால் அந்த கும்பல் ஓட ஓட விரட்டி சரமாரியாக அவரது தலை, முதுகு மற்றும் கழுத்து போன்ற இடங்களில் வெட்டினர். இதனையடுத்து காயம் அடைந்த நாராயணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நாராயணனின் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்.

அதன்பின் போலீசார் நடத்திய விசாரணையில் காசிமேடு சூரிய நாராயணன் சாலை அண்ணா நகர் கடற்கரை பகுதியில் நாராயணனின் தம்பி சுடர்மணி கடந்த 3 மாதத்திற்கு முன்பு வெட்டிக் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. அந்த வழக்கில் திருவொற்றியூர் கரிமேடு பகுதியில் வசித்து வரும் ஐந்து பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்து விட்டனர். அந்த குற்றவாளி நாராயணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு பீர் பாட்டிலால் தாக்கியுள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட நாராயணன் சிறையில் இருந்து சில நாட்களுக்கு முன்பு தான் வெளியே வந்துள்ளார்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முன்விரோதம் காரணமாக நாராயணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் தம்பி படுகொலை செய்யப்பட்ட மூன்று மாதத்திலேயே அண்ணன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.