பழி தீர்க்குமா மும்பை…. பஞ்சாப் அணியுடன் மோதல்..!!

ஐ.பி.எல் போட்டியில் இன்றைய ஆட்டத்தில்  மும்பை இந்தியன்ஸ்  மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐ.பி.எல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்  மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி மும்பை வான்கடே  ஸ்டேடியத்தில்  தொடங்குகிறது. இரண்டு அணிகளும் இதுவரை 23முறை நேருக்கு நேர் மோதியுள்ளது.இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 முறையும், பஞ்சாப் அணி 11 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் நடந்த முந்தைய ஆட்டத்தில்  பஞ்சாப் அணி அதன் சொந்த மண்ணில் மும்பை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மும்பை அணி நிர்ணயித்த 177 ரன்கள் இலக்கை பஞ்சாப் அணி 8 பந்துகள் மீதம் உள்ள நிலையில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணியை பழி தீர்க்க மும்பை அணி ஆக்ரோஷத்தில் களமிறங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இரண்டு அணிகளும் முந்தைய ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியுள்ளது. மும்பை அணியில் புதுமுக வீரர் ஜோசப் அல்சாரி சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 3.4 ஓவரில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் சாய்த்தார். அவர் இந்த போட்டியில் மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் சம பலம் வாய்ந்த அணியாக திகழ்வதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.