கரூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு மடவிளாகம் பகுதியில் ஆடிட்டரான முத்துராமன்(53) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பானுப்பிரியா(49) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு பூர்ணிமா(23), ஹரித்யா(21) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் ஹரித்யா சேலத்தில் இருக்கும் மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். இதனால் ஹரித்யாவை சேலத்தில் கொண்டு விடுவதற்காக முத்துராமன் தனது மனைவி மற்றும் மகள்களுடன் காரில் புறப்பட்டார். இந்நிலையில் மூலியமங்கலம் பிரிவு அருகே சென்ற போது முன்னால் சென்ற லாரி டிரைவர் சடன் பிரேக் பிடித்து சிக்னல் இல்லாமல் லாரியை நிறுத்தினார்.
இதனால் பின்னால் வந்த முத்துராமனின் கார் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முத்துராமன் உள்பட 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பானுப்பிரியாவும், பூர்ணிமாவும் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.