3 மாதங்களாக அரிசி வழங்கவில்லை… ரேஷன் கடையை முற்றுகையிட்டு மக்கள் ஆர்ப்பாட்டம்..!!

3 மாத காலமாக அரிசி வழங்கவில்லை எனக் கூறி கிராம மக்கள் 200-க்கும் அதிகமானோர்  நியாயவிலைக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள பரவத்தூர் மேற்கு கிராமத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. இங்கு வசித்து வரும் மக்கள் பெரும்பாலும் சிறு, குறு விவசாயிகள், தினமும் கூலிவேலைபார்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்கள் கடந்த 3 மாத காலமாக கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இருந்துவரும் நிலையில், எந்தவித வருமானமும் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்தக் காலகட்டத்தில் மக்கள் பசியில் வாடக்கூடாது என்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் சிறப்பு நிவாரணமாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை மக்களுக்கு வழங்கி வருகின்றன.

இந்நிலையில் பரவத்தூர் மேற்கு கிராமத்தில் இருக்கும் நியாயவிலைக் கடையில் கடந்த 3 மாத காலமாக இங்குள்ள மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அரசால் வழங்கப்படும் அத்தியாவசிய பொருள்கள் முறையாக வழங்கவில்லை என்று கூறி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 200க்கும்  மேற்பட்ட பொதுமக்கள் நியாயவிலைக் கடையின் வாசலின் முன் அமர்ந்து, ‘அரிசி கொடு..  அரிசி கொடு!’ என கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 3 மாத காலமாக தாங்கள் குழந்தைகளுடன் பசியில் வாடிவருவதாகவும், அரசு உயர் அலுவலர்கள் தங்களது நிலை கருத்தில் கொண்டு உடனடியாக அரசால் வழங்கப்படும் இலவச அரிசியை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைவைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *