சென்னை மாவட்டத்தில் உள்ள வானகரம் சக்தி நகரில் ரகுராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரும்பாக்கத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ரகுராமின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஆன்லைனில் குறைந்த விலையில் தங்கம் விற்பனை செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்த லிங்க்கை ரகுராம் கிளிக் செய்து தனது வங்கி கணக்கு குறித்த விவரங்களை பதிவு செய்துள்ளார்.
சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கிலிருந்து 5 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரகுராம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நூதன முறையில் பணத்தை திருடிய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.