செல்போன் கடையின் பூட்டை உடைத்து மடிக்கணினி மற்றும் பணம் திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சோழிங்கநல்லூரில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அன்னை இந்திரா தெருவில் செல்போன் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரின் கடை உடைக்கப்பட்டு மடிக்கணினி மற்றும் ரூ 3 ஆயிரத்து 500 ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து ராஜேஷ் செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் காந்திநகர் ஏரிக்கரை பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் ஆவடியை சேர்ந்த சதீஷ், சஞ்சய், ராகேஷ் ஆகிய 3 பேர் என்பதும் அவர்கள்தான் மடிக்கணினி மற்றும் பணத்தை திருடினர் என்பதும் தெரிய வந்தது. பின்னர் காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதோடு செல்போன் கடையில் திருடிய பொருட்களை உரிமையாளரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.