“MGR Vs கலைஞர்” திமுக தோல்விக்கு காரணம் என்ன….? ஓர் தொகுப்பு….!!

தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி 1969-1976, 1989-1991,1996-2001,2006-2011 ஆகிய காலகட்டத்திலும், MGR 1976-1987 வரையிலான காலகட்டத்திலும் முதல்வராக பணியாற்றினர். இக்காலகட்டத்தில் MGR திமுக-விட்டு பிரிந்தது ஏன் ? MGR கட்சி தொடங்கிய பின் திமுக தொடர் தோல்வியை தழுவியது ஏன் ? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

தமிழகத்தின் திராவிட ஆட்சி காலத்தில் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு முதல்வர் பதவியில் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தியவர்கள் கலைஞர் மற்றும் எம்ஜிஆர். ஆரம்ப காலகட்டத்தில் இருவரும் நண்பர்களாகவே இருந்தார்கள். அவர்களது நட்பு எந்த அளவிற்கு இருந்தது என்றால், சினிமா துறையிலும், அரசியலிலும் இருவரும் ஒரே சமயத்தில் காலடி எடுத்து வைத்து அதில் இருவரும் ஒரே அளவிலான பிரம்மாண்ட வளர்ச்சியும் பெற்றார்கள்.

தமிழகத்தில் காங்கிரஸ் இல்லாத திராவிட ஆட்சியை கட்டமைப்பதற்கு மிகப்பெரிய பங்காற்றியவர்கள் எம்ஜிஆர் மற்றும் கலைஞர் என்றால் அது மிகையாகாது. இவர்களது நட்பிற்கு பல வெற்றிகள் தொடர்ந்து கிடைத்தும்  இருவரும் பிரிந்ததற்கான காரணம் என்ன என்று கேள்வி தொடர்ச்சியாக அனைவரது மத்தியிலும் இருக்கும். இதற்கு பல காரணங்களும் உண்டு.

அண்ணாவின் மறைவிற்குப் பிறகு எம்ஜிஆர் தனது திராவிட கொள்கை சிந்தனையிலிருந்து மாற தொடங்கியதாக சில தகவல்கள் வெளியாகின்றன. அதற்கு ஆதாரமாக அண்ணா புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த போது அமெரிக்காவில் சிகிச்சை செல்லும்முன் “இல்லத்தில் ஓர் எதிரி” என்னும் ஒரு புத்தகத்தின் முதல் பக்கத்தை கிழித்து அதை எம்ஜிஆரிடம் கொடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

அதைப்போலவே அண்ணாவின் மறைவிற்குப் பின்பு அது வரை திமுக பின்பற்றி வந்த பழக்க வழக்கங்களை புறந்தள்ளி தனக்கென்று ஒரு பாணியை வகுத்துக்கொண்டார் MGR. இதனை திமுகவில் பலரும் எதிர்த்தனர். அதை தொடர்ந்தே எம்ஜிஆருக்கு திமுக கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பி அவர் குறித்து தரம்தாழ்ந்த கருத்துகள் பரப்பப்படவே விரக்தியடைந்த MGR, 

பொது மேடை ஒன்றில் திமுக மாவட்ட செயலாளர், கிளைச் செயலாளர் உட்பட அனைவரும் தங்களது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும், அவர்களது பெயரில் இருக்கும் சொத்துக்களின் பட்டியலை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என கூறியிருந்தார். இவர் கூறியதற்கு திமுக தலைமை சார்பில் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பவே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு திமுகவில் இருந்து MGR சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அதை தொடர்ந்து வேறு கட்சியை ஆரம்பிப்பதற்காக எம்ஜிஆர் முயல்வதாக தகவல் வெளியாகவே, பெரியாரால் சமரசம் செய்ய அழைக்கப்பட்டு,  அந்த சமரசப் பேச்சும்  தோல்வி அடையவே தனிக் கட்சியை தொடங்கினார். அதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என பெயரும் வைத்தார். மக்கள் மத்தியிலும் எம்ஜிஆர் ஊழலை வெளிக் கொண்டுவர முயற்சித்ததன் காரணமாகவே திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்ற பிம்பம் தோன்றியது.

அதன்பின் ஊழலை எதிர்க்க பிறந்த கதாநாயகன் போலவே காட்சியளித்தார். அதன்பின்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உள்ளிட்ட தோழமை கட்சிகளுடன் கூட்டணி வைத்து பெரும்பான்மையான இடங்களை அதிமுக கைப்பற்றி தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. அதன் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் எம்ஜிஆர் மறையும்வரை ஆட்சியைப் பிடிக்கவே இல்லை.

அதற்கு முக்கியமான காரணம் எம்ஜிஆர் தனது தேர்தல் பிரச்சாரங்களில் கலைஞர் செய்த தவறையும், திமுக செய்த தவறுகள்  என உட்கட்சி விவகாரங்களை வெளியில் போட்டு உடைத்தது தான். தற்போது இதே பாணியை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அதிமுக கட்சியிலிருந்து பிரிந்து வந்த டிடிவி ஆதரவாளர்களும், சில பிரமுகர்களும் அதிமுகவிற்கு எதிராக கையாண்டு வருகின்றனர்.

சமீபத்தில் சசிகலா அவர்கள் சிறைவாசம் முடித்து வரும் போது, பல அதிமுகவினர் அவரை மறைமுகமாக சந்தித்து உதவி செய்தனர். அவர் அரசியலில் ஈடுபட்டிருந்தால், நிச்சயம் அதிமுக பிளவுபட்டிருக்கும். எது எப்படியோ அரசியல் களத்தை பொறுத்தவரையில் யார் ராஜாவாக இருக்கிறார்களோ அவர்கள் பக்கம்தான் சிப்பாய்களும் சாய்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *