விவசாயிகளின் பாசனத்திற்காக மேட்டூர் அணை நீரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
கேரளா_வின் வயநாடு ,கர்நாடகா_வின் குடகு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் மைசூரு கே.ஆர்.எஸ். அணை மற்றும் கபினி அணை நீர்வரத்து அதிகரிப்பால் நிரம்பி வருகின்றது. இதனால் தமிழகத்திற்கும் காவேரி ஆற்றில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது.தமிழகத்திற்கு தொடர்ந்து பெருக்கெடுத்து வரும் நீரின் அளவு அதிகரித்து வந்த நிலையில் மேட்டூர் அணையில் நீர் மட்டம் மளமளவென உயர்ந்தது.4 நாட்களில் 40 அடி உயர்ந்தது 100 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில் அணையில் போதிய நீர் இருப்பு இருப்பதால் காவிரி டெல்டா பாசனத்துக்காக நீர் திறந்து விடுவது வழக்கம். இதனால் அணையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

மேட்டூர் அணையை திறந்து வைத்து , காவிரியாற்றில் மலர்தூவினார் முதல்வர் பழனிசாமி. இதனால் முதல் கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ளது. இந்த அளவும் படிப்படியாக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வரை உயர்த்தப்படும். மேட்டூர் அணையில் திறக்கப்பட்டுள்ள நீர் அடுத்த 3 நாள்களில் கல்லணையை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே காவிரி படுகையில் உள்ள 700 ஏரி, குளங்களில் நீரை நிரப்பி, அதன் மூலமாக விவசாய பாசனத்துக்கு நீரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.