மேட்ச் பிக்சிங் – 2 இந்திய கிரிக்கெட் வீரர்கள் கைது ….!!

கர்நாடக பிரீமியர் லீக் டி20 தொடரில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட இரண்டு கிரிக்கெட் வீரர்களை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளைப் போன்று ஒவ்வொரு மாநிலங்களிலும் டி20 கிரிக்கெட் தொடர்கள் நடைபெறுகிறது. அந்த வகையில் கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 தொடர்தான் கர்நாடக பிரீமியர் லீக். இந்தத் தொடரின் கடந்த சீசனில் மொத்தம் ஏழு அணிகள் பங்கேற்றன. ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் பெல்லாரி டஸ்கர்ஸ் அணியை ஹுப்ளி டைகர்ஸ் அணி எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இதனிடையே இந்த இறுதிப்போட்டியில் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் கூறி பெல்லாரி டஸ்கர்ஸ் அணியின் கேப்டன் சி.எம். கவுதம், அப்ரார் கஸி ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட வீரர்கள் இருவரும் இறுதிப்போட்டியில் ரன்கள் எடுக்காமல் மெதுவாக விளையாடுவதற்காக 20 லட்சம் பெற்றுள்ளனர். இந்தப் போட்டி தவிர பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியிலும் அவர்கள் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெல்லாரி டஸ்கர்ஸ் அணியின் கேப்டன் கவுதம் கர்நாடகா, கோவா ஆகிய ரஞ்சி அணியிலும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணியிலும் விளையாடியுள்ளார். இவர் இந்திய ஏ அணியிலும் முன்னதாக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். முன்பு கர்நாடக அணிக்காக ரஞ்சியில் விளையாடிய கஸி தற்போது மிசோரம் அணியில் உள்ளார்.

இதேபோன்று ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்ட குற்றத்திற்காக பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி வீரர் விஸ்வநாதன், அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் வினு பிரசாத் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக பெலகவி பேந்தர்ஸ் அணியின் உரிமையாளர் ஆஷ்பாக் அலி தாரா கைது செய்யப்பட்டார். தற்போது மேலும் பலர் முறைகேட்டில் ஈடுபட்டு சிக்கியிருப்பது கர்நாடக பிரிமீயர் லீக் தொடரின் நம்பகத்தன்மை மீது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *