மருத்துவ கழிவுகளை தீ வைத்து சென்ற மர்ம நபர்கள்… புகை மூட்டத்தால் மூச்சுத் திணறல்… வாகன ஓட்டிகள் கடும் அவதி…!!!

சாலையோரம் கொட்டிச் சென்ற மருத்துவ கழிவுகளை தீ வைத்து எரித்ததால் அங்கு ஏற்பட்ட புகை மூட்டத்தில் அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

சென்னை பூந்தமல்லியில் உள்ள மதுரவாயல் பைபாஸ் சாலைக்கு அருகில் உள்ள வானகரம் சர்வீஸ் சாலையில் குப்பைகள் கொட்டி  குவிந்து வருகின்றனர். பலர் குப்பைகளுடன் சேர்த்து பல்வேறு மருத்துவ கழிவுகளையும் கொட்டி செல்கின்றனர். அங்கு குப்பைகளை கொட்ட கூடாது என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றை யாரும் கண்டுகொள்வதில்லை.

மாநகராட்சி மற்றும் வானகரம் ஊராட்சி ஊழியர்கள் அக்குப்பையை நீக்கி சுத்தம் செய்து வந்துள்ளனர். சில சமூக விரோதிகள் அப்பகுதியில் நேற்று மதியம் சில மருத்துவ கழிவுகளை கொட்டி, தீ வைத்து எரித்து சென்றுள்ளனர். குப்பைகள் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம் காணப்பட்டது. அப்பகுதியில் அப்போது சென்ற வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் மூச்சுத் திணறல் போன்ற கடும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

பின்பு தகவலறிந்து அங்கு விரைந்து வந்த மதுரவாயல் தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின் அத்தீயை அணைத்தனர். இப்பகுதியில் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகளை கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.