நிபா, வெள்ளம், கொரோனா… 3 முறை ஒத்தி வைப்பு… இளஞ்ஜோடிக்கு எப்போது திருமணம்?

கேரளாவில் நிபா வைரஸ் மற்றும் வெள்ளத்தால் 2 முறை தள்ளிப்போன இளஞ்ஜோடிகளின் திருமணம் தற்போது 3ஆவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் இரன்கிபலன் என்ற பகுதியை சேர்ந்தவர்  26 வயதான பிரேம் சந்திரன். அதேபகுதியை சேர்ந்தவர் 23 வயதான சந்திரா சந்தோஷ். இவர்கள் இருவருமே  குழந்தைப் பருவத்தில் இருந்தே ஒன்றாக நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு இருவரது வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து,கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி பெற்றோரின் சம்மதத்துடன் பிரேம் – சந்திராவுக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அந்த நேரத்தில் கேரளாவில் நிபா என்ற வைரஸ் பரவி மக்களை அச்சுறுத்தி வந்தது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் 17 பேர் இறந்தனர். நிபா வைரஸ் காரணமாக மக்கள் கூட்டமாக கூடுவதற்கு அம்மாநில அரசு தடை விதித்ததால் 2018 மே 20-ம் தேதி நடைபெற இருந்த திருமணம் முதல்முறையாக தள்ளிவைக்கப்பட்டது.

அதன்பின் நிபா வைரஸ் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்ததையடுத்து அடுத்த மாதமே உடனடியாக திருமணத்தை நடத்த வேண்டும் என்று குடும்பத்தார் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இவர்களின் குடும்பத்தில் நெருங்கிய உறவினர் ஒருவர் பலியானதையடுத்து திருமணம் மீண்டும் தடைபட்டது.

Image result for Marriage of couples who have been postponed  by floods and floods in Kerala is now postponed for the 3rd time.

அதைத்தொடர்ந்து, இரண்டுமுறை தடைபட்ட திருமணத்தை கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓணம் பண்டிகையின் போது மீண்டும் நடத்த ஏற்பாடுகள் செய்திருந்தனர். ஆனால், மீண்டும் திருமணத்தை தள்ளிவைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. காரணம், கடந்த செப்டம்பர் மாதம் முதல் கேரளாவில் கனமழை வெளுத்து வாங்கி வெள்ளக்காடாக காட்சியளித்தது. இயற்கை பேரிடரால் காதல் ஜோடி திருமணம் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், சரி இனி எந்த பிரச்னையும் இல்லை என்று நினைத்த பிரேம்-சந்திரா ஜோடி இந்த ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி (நேற்று) தங்கள் திருமணத்தை நடத்த முடிவு செய்திருந்தனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக கேரளாவில் 52 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே மாநிலம் முழுவதும் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இதன் காரணமாக தான் நேற்று நடைபெற இருந்த இந்த ஜோடியின் திருமணம்  3 ஆவது முறையாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.இப்படி அடுத்தடுத்து தடைகளாக வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும், திருமணம் எத்தனை தடைகள் வந்தாலும் பிரேம்-சந்திரா தம்பதியின் திருமணம் நிச்சயமாக நடைபெற வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.