மத்திய அரசின் திட்டங்களை மம்தா பானர்ஜி அனுமதிப்பதில்லை – மோடி தாக்கு..!!

மத்திய அரசின் நலத்திட்டங்கள் இடைத்தரகர்களை ஒழிப்பதால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அத்திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

கொல்கத்தா துறைமுக அறைக்கட்டளை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கடுமையாகத் தாக்கிப் பேசினார். இந்நிகழ்ச்சியில் பேசிய நரேந்திர மோடி, “ஆயுஷ்மான் பாரத், பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி போன்ற திட்டங்களை மேற்கு வங்க மாநில அரசு அனுமதிப்பதில்லை. அவ்வாறு அனுமதித்தால் இந்த மாநில மக்களும் பயனடைவர்.

ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் கடும் நோய்களில் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 75 லட்சம் மக்கள் பயனடைவர். பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தால் சுமார் 43 ஆயிரம் கோடி ரூபாய், எட்டு கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் போடப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டங்களில் இடைத்தரகர்கள் இல்லை, பணம் சுரண்டல் இல்லை. இத்திட்டங்கள் பயனாளர்களை நேரடியாக சென்றடைகின்றன. இதுபோன்ற நல்ல திட்டங்களை யார்தான் அனுமதிப்பார்கள்?” என்று மம்தா பானர்ஜியை மறைமுகமாகத் தாக்கிப் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், “நாட்டிலுள்ள எட்டு கோடி விவசாயிகள் பலன் பெறுகின்றனர். இருந்தபோதும், என் இதயம் வலிக்கிறது. மேற்கு வங்க ஏழைகள் உடல்நலமில்லாமல் போனால் அவர்கள் ஆயுஷ்மான் திட்டத்தில் பயனடைய வேண்டும். பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியில் ஏழை விவசாயிகள் பயனடையட்டும். கிராமங்கள் மற்றும் ஏழை மக்களின் வளர்ச்சிக்கு போராடும் வங்க மகன்களின் நலனை பேனுவதே நமது இலக்காக இருக்கவேண்டும். இது யாரோ ஒருவருடைய பொறுப்பு அல்ல. இது அனைவரது ஒருங்கிணைந்த பொறுப்பு” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *