மனதில் தோன்றும் மாலை நேர எண்ணங்கள்..!!!

 குளிர்ந்த காற்று வீசும் அந்திவேளையில் சுகமான ராகங்களுடன், இனிமையான நினைவுகளுடன் நேரத்தை கடப்பது அத்தனையொரு மகிழ்ச்சி மனதில்.

முப்பொழுதினில் மாலைப் பொழுது என் மனதோடு ஒன்றிய ஒன்று. அது சொல்லனும்னா, ஓர் அமைதியை எனக்கு கொடுக்கும். அந்த அமைதி பெரும்பாலும் என் பால்ய கால நினைவுகளையே சுமந்து கிடக்கும்.

அதாவது ஒரு நாளில் சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் நாம் மிகுந்த உற்சாகத்துடன் இருப்போம். அந்நேரத்தில் நாம் செய்யும் வேலைகள் நமக்கு பெருமளவில் முன்னேற்றத்தை தரும் அல்லது மனதிற்குள் நல்ல பல சிந்தனைகள் பிறக்கும்.

பொதுவாக பள்ளி பருவத்தில்  மாலை நேரங்களில் பள்ளி மணி ஒலித்தவுடன் சிட்டாய் பறக்கும் மற்றவர்கள் மத்தியில் , எல்லோரும் சென்ற பின்னரும் பள்ளியில் இருந்து மரங்களில் அமர்ந்து கொண்டு கீச்சிடும் அந்த பறவைகளின் இசையுடன் தனிமையில் நான் இருப்பேன்.

சீராய் வீசும் அந்த மாலை நேர தென்றலில் என் உடலை விட்டு நான் மிதப்பதை உணர்ந்திருக்கிறேன். இவையெல்லாம் என்ன உணர்வுகள் என்று தெரியாமலே அப்பருவத்தில் இதை நான் இரசித்திருக்கறேன். பலமுறை இவ்வாறு இருள் சூழும் வரை பள்ளியிலேயே அந்த தனிமையில் நான் இருந்திருக்கிறேன்.

எந்த வித மன அழுத்தங்களும் இன்றி வீடு திரும்பும் அம்மாலை வேளையிலே கரையும் காக்கை கூட்டத்தின் சப்தம் என்றும் என் மனதை விட்டு நீங்காதவை. அவற்றை வேடிக்கை பார்க்கும் நேரங்களே என் அற்புத மாலை நேரங்கள். அம்மாலை நேரங்கள் இனி திரும்புமா தெரியவில்லை.

இதை எழுதி கொண்டு இருக்கும் போதே பாரதியின் அந்திப் பொழுது பற்றிய கவி ஒன்று நினைவில் உதித்தது. இதோ காக்கைகளைப் பற்றி அவரின் வார்த்தைகள்.

“காவென்று கத்திடுங் காக்கை – என்றன்
கண்ணுக் கினிய கருநிறக் காக்கை,
மேவிப் பலகிளை மீதில் – இங்கு
விண்ணிடை அந்திப் பொழுதினைக் கண்டே
கூவித் திரியும் சிலவே – சில
கூட்டங்கள் கூடித் திசைதொறும் போகும்.”

– பாரதியார்

இன்று இந்த நகரத்தில் கண்படும் ஒன்றிரண்டு காக்கைகளை காணும் போது அவையும் நம்மைப் போல் பிழைப்புத் தேடி வீடு விட்டு வந்திருக்குமோ என்றே  எண்ணத் தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *