“பதிவு திருமணம் செய்து கொள்ள சென்ற ஜோடி” அடித்து இழுத்துச் சென்ற உறவினர்கள்…. நாகையில் பரபரப்பு….!!!

பதிவு திருமணம் செய்ய சென்ற பெண்ணை உறவினர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள செம்பியன்மாதேவி கிராமத்தில் நல்லதம்பி என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் மதன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருகின்றார். இதில் கீரனூர் பகுதியில் வசித்து வரும் பாரதி என்பவருக்கும் இவருக்கும் நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அப்போதும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பதிவு திருமணம் செய்ய முடிவு செய்து கோர்ட் வளாகத்தில் அமைந்துள்ள சார் பதிவாளர் அலுவலகத்திற்கு இருவரும் வந்தனர்.

அப்போது பதிவுத் திருமணம் செய்து கையெழுத்து போட முயன்றபோது சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்த பாரதியின் உறவினர்கள் அவரை வலுக்கட்டாயமாக காருக்கு இழுத்து சென்றனர். இதனை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் பாரதியின் உறவினர்களிடம் கேட்ட போது அவர்கள் பதிலேதும் சொல்லாமல் பாரதியை வலுக்கட்டாயமாக ஏற்றிச் செல்ல முயன்றனர். பின்னர் பொதுமக்கள் காரை முற்றுகையிட்டு அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மதன் தனக்கும் பாரதிக்கும் திருமணம் நடந்து விட்டதாகவும், எனது மனைவியை அவரது உறவினர்கள் காரில் கடத்தி செல்ல முயற்சிப்பதாகவும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் பாரதியை மீட்டு மதனிடம் ஒப்படைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *