“உண்மையான காதல் வென்றது” இரு கால்கள் செயலிழந்த காதலி…. தடைகளை தாண்டிய இளம் ஜோடிகள்…!!

இரு கால்களும் செயலிழந்த தனது காதலிக்கு துணையாக நின்று அவரை திருமணம் செய்து கொண்ட இளைஞரின் உண்மையான காதல் அனைவரையும் வியக்க வைக்கிறது.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிக்கமங்களூரு மாவட்டத்தில் பக்தரஹள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் ஸ்வப்னா என்ற பெண்ணும், மனு என்ற ஆணும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் 12-ஆம் வகுப்பு வரை ஒன்றாக படித்துள்ளனர். அதன்பின் உயர்நிலை படிப்புகளை தொடர முடியாத காரணத்தால் கல்லூரி படிப்பில் இருந்து பாதியில் நின்ற மனு அங்குள்ள ஒரு கடையில் வேலை பார்த்துக் கொண்டே தனது குடும்பத்தை நடத்தியுள்ளார். அந்த சமயம் ஸ்வப்னாவும் சிக்கமங்களூரு பகுதிக்கு டைப்ரைட்டிங் படிப்பதற்காக சென்றுள்ளார்.

இந்நிலையில் திடீரென ஸ்வப்னாவின் கால்கள் செயல் இழந்ததால் அவரால் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மனு அவரது வேலையை விட்டுவிட்டு ஷோபனாவை அழைத்துக் கொண்டு பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்றுள்ளார். ஆனாலும் எந்த மருத்துவர்களாலும் ஸ்வப்னாவின் கால்கள் செயலிழந்து போனதற்கான உண்மையான காரணம் குறித்து கண்டுபிடிக்க இயலவில்லை. இதனால் ஸ்வப்னா தன்னை தவிர்த்து வேறு ஒரு நல்ல பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென மனுவை வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதனை ஏற்காத மனு அனைத்து சூழ்நிலைகளிலும் அவருக்கு துணையாக இருந்துள்ளார்.

இந்நிலையில் இந்த காதல் ஜோடிகளின் திருமணம் ஆனது அவர்களது கிராமத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதுகுறித்து மனு கூறும் போது, தான் உண்மையாக காதலித்தது ஸ்வப்னாவின் மனதை தான் என்றும், அவரால் தற்போது எழுந்து நடக்க முடியாத சூழல் இருந்தாலும் எந்த காரணத்திற்காகவும் தான் ஸ்வப்னாவை கைவிடப் போவதில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் தான் அவரை உண்மையாக காதலிப்பதாகவும், என்றும் இந்த காதல் மாறாமல் அவருக்கு துணையாக இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து ஸ்வப்னா கூறும் போது, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள தான் கூறியும் மனு சம்மதிக்காமல் தனக்கு துணையாக நின்றதாகவும், மனுவை திருமணம் செய்து கொண்டதால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி எனவும் கூறியுள்ளார். இவ்வாறு பல்வேறு தடைகளை கடந்து தனது காதலில் வெற்றி பெற்று திருமணம் செய்து கொண்ட இந்த இளம் ஜோடிகளின் காதல் அனைவரையும் வியக்க வைக்கிறது.