தூக்கிய ஓபிஎஸ்…. நீக்கிய ஈபிஎஸ்… மாறி. மாறி பந்தாடிய அதிமுக…!!

பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் புதிய பொறுப்புக்கு தூக்கிய நிலையில், ஈபிஎஸ்  அவரை கட்சியில் இருந்து நீக்கம்  செய்துள்ளார். 

பண்ருட்டி ராமச்சந்திரன் ஜெயலலிதா இருந்த பொழுது கடந்த 2015 ஆம் ஆண்டில் தேமுதிகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அதிலிருந்து கட்சியின் அமைப்பு செயலாளராக செயல்பட்டு வருகிறார். தற்பொழுது அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பிரச்சனை காரணமாக அவர் எந்த ஒரு நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்தார். ஆனால் அவரை அவ்வப்போது முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தொடர்ச்சியாக இரண்டு முறை கடந்த மாதம் நேரடியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதேபோல சசிகலாவும் அவரை சந்தித்து ஆலோசன நடத்தினார். ஓபிஎஸ் மற்றும் சசிகலாவின் நிலைப்பாட்டில் பண்ருட்டி ராமச்சந்திரன் இருந்த காரணத்தினால் அவரை நீக்கி  எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் நேற்று  ஓ பன்னீர்செல்வம் அதிமுகவின் அரசியல் ஆலோசகராக மூத்த தலைவராக இருக்கக்கூடிய பண்ருட்டி ராமச்சந்திரன் செயல்படுவார் என்று அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்கள்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக எடப்பாடி பழனிச்சாமி அவரை அதிமுகவிலிருந்து நீக்கி இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதுபோன்ற அறிவிப்பு அதிமுகவில் தொடர்கதையாக கடந்த நான்கு, ஐந்து மாதமாக இருந்து வருகின்றது. அதிமுகவிலில் ஒற்றை தலைமை பிரச்சனை நீடித்து வரக்கூடிய நிலையில், நீதிமன்றத்திலும் இந்த வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடதக்கது.