இந்த அருமையான கருவாட்டு தொக்கை மட்டும் செய்து சாப்பிட்டு பாருங்க… இது அசைவ பிரியர்களுக்கு அவ்ளோ பிடிக்கும்..!!

நெத்திலி கருவாட்டு தொக்கு செய்ய தேவையான பொருட்கள்:

நெத்திலி கருவாடு          – 200 கிராம்
சின்ன வெங்காயம்         – 10
தக்காளி                                – 3
பச்சை மிளகாய்               – 3
பூண்டு                                   – 4 பல்
மிளகாய் தூள்                   – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்                      – 1/4 டீஸ்பூன்
கடுகு                                     – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை                – சிறிது
உப்பு                                      – தேவையான அளவு
எண்ணெய்                        – தேவையான அளவு

செய்முறை: 

முதலில் சின்ன வெங்காயத்தை தோல் நிக்கியபின் அதனுடன் தக்காளியையும் சிறு துண்டுகளாகவும், பச்சை மிளகாயை நிலவாக்கிலும் நறுக்கி கொள்ளவும். பின்பு கருவாட்டு துண்டுகளை  வெதுவெதுப்பான தண்ணீரில் ஊறவைத்து சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்.

பிறகு அகலமான கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காயந்ததும், கடுகு, கறிவேப்பிலையை போட்டு தாளித்தபின், தோல் நீக்கிய பூண்டு, நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

மேலும் அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கியபின், நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கி கொள்ளவும்.

பின்னர் தக்காளி நன்கு குழைந்தபின், அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு தூவி மசாலா வாசனை போகும் வரை நன்கு கிளறி விடவும்.

கடைசியில் கிளறி விட்ட கலவையில் பச்சை வாசனை போனபின், சுத்தம் செய்த கருவாட்டு துண்டுகளை சேர்த்து,  சில நிமிடம் கருவாட்டு துண்டுகளில் மசாலா படும் வரை நன்கு கிளறி விட்டபின் இறக்கி பரிமாறினால் கிராமத்து சுவையில் மணமான நெத்திலி கருவாட்டு தொக்கு தயார்.