”விநாயகர் சதுர்த்தி பூஜை முறை” அறிந்து கொள்ளுங்கள்….!!

விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அன்பர்கள் அதன் பூஜை முறையை அறிந்து கொண்டு வழிபடுங்கள்.

விநாயர்கர் சதுர்த்தி விரதத்தை மேற்கொள்பவர்கள் முதல் நாளன்று வீட்டை நன்றாக கழுவி தூய்மைப் படுத்திக்கொள்ள வேண்டும். நம் வீட்டில் என்னென்னெ பூஜை பொருள் இருக்கின்றதோ, குத்துவிளக்கு , காமாட்சி விளக்கு , கஜலட்சுமி விளக்குகள் ஏதாவது விளக்குகளை நன்றாக கழுவி காய வைத்து சந்தனம் , குங்குமம் வைக்க வேண்டும். குத்துவிளக்காக இருந்தால் நாம் எல்லா பக்கமும் திரிகள் போடவேண்டும்.

பூஜை அறையில் சுத்தமான பலகையில் கோலமிட்டு , அதன்மீது தலைவாழை இலையை போட வேண்டும். நுனி பாகம் வடக்கு முகமாக இருக்க வேண்டும். அந்த இலை மீது பச்சரிசியை பரப்ப வேண்டும். அந்த அரிசியின் மீது களிமண்ணில் செய்துள்ள விநாயகர் விக்ரகத்தை வைக்க வேண்டும். விநாயகர் சதுர்த்திக்கு களிமண் பிள்ளையார் தான் ரொம்ப விசேஷமானது. ஆகவேதான் பிள்ளையார் செய்தும் வைத்துக் கொள்ளாமல் , வாங்கியும் வைத்துக் கொள்ளலாம். மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து வைக்கலாம். அது மேற்கு நோக்கி இருக்க வேண்டும். செய்த பிள்ளையார் சிலைகளை எருக்கம் பூ அணிவித்து , செவ்வந்தி , மல்லிகை , அரளி போன்ற மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.

பூஜைக்கான பொருட்கள் சந்தனம்,  குங்குமம் , விபூதி , பூ , தேங்காய் பழங்கள் , வெற்றிலை , பாக்கு , சூடம் , சாம்பிராணி எல்லாமே நாம் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். சுவாமி படத்துக்கு முன்பாக சுத்தமாக தண்ணீர் நிரம்பிய சொம்பு வைக்கவேண்டும்.தண்ணீரில் சிறிது மஞ்சள் சேர்க்க வேண்டும்.பின்னர் உயரமான குத்து விளக்குகளை வைத்து நெய் அல்லது நல்லெண்ணையில் தீபம் ஏற்றவேண்டும். சுவாமி படத்துக்கு அருகில் சிறு கஜலட்சுமி அல்லது காமாட்சி விளக்கு வைத்து நெய் தீபம் அல்லது எண்ணெய் தீபம் ஏற்றலாம். ஒரு செம்பின் வாயில் மாவிலை சொருகி அதன் நடுவில் தேங்காய் மஞ்சள் பூசி நிறுத்தின வாக்கில் வைக்கவும். கலசத்திற்கு சந்தனம் , குங்குமம் , மஞ்சள் பூச வேண்டும்.

சுவாமி படத்துக்கு முன்பாக நம்முடைய வசதிக்கேற்ப நாம் நிவேதனப் அலங்காரங்களை வைத்து வழிபடலாம். மாம்பழம் , பலாப்பழம் என்னும் முக்கனிகள் கரும்பு , எள் , கடலை , அப்பம் , மோதகம் , பொரி உருண்டை , அவல் , பொரி கடலை , தேங்காய் , விளாம்பழம் , நாவல்பழம் போன்ற விநாயகருக்கு விருப்பமான பழங்களை வைக்கலாம். இதையெல்லாம் செய்ய வசதி இல்லை என்றால் நம்மால் இயன்ற நிவேதனப் பொருட்களை வைக்கலாம். சர்க்கரை கலந்த நீரை கூட நாம் வைக்கலாம். பிள்ளையார் சிலைக்கு சந்தனம் , குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். அதன்பின் கிழக்கு பார்த்து விநாயகப்பெருமானை வைத்து மனமார வேண்டி , என் சங்கடங்களை நீயே தீர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜையை நாம் தொடங்க வேண்டும்.