போலி ஆவணம் மூலம்…. ரூ. 87 லட்சம் மதிப்புள்ள நிலம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

காஞ்சிபுரம் போஸ்ட் ஆபீஸ் தெருவில் மல்லிகா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் சந்திரபாபு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு 1200 சதுர அடியில் நிலம் இருக்கிறது. இந்நிலையில் 2-வது மகளின் படிப்பு செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் மல்லிகா அந்த நிலத்தை விற்க முடிவு செய்துள்ளார். அப்போது மல்லிகா வெள்ளனூர் சென்று பார்த்த போது அந்த நிலம் வேறு ஒருவருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக மல்லிகா மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், பெரம்பூர் பகுதியை சேர்ந்த எட்வின் என்பவர் சந்திரபாபுவின் பெயரில் போலியான இறப்பு சான்றிதழ் வாங்கியுள்ளார். பின்னர் அவரது மகள் தேவி என்று போலியாக வாரிசு சான்றிதழையும் வாங்கி 87 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து எட்வினை போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.