குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலம் ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி!

2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை மீண்டும் கூடிய நிலையில், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார். குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என அவர் கூறியுள்ளார்.

மீன்வளத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்த காரணத்தினால் தான் மீன்வளத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடல் அரிப்பை தடுக்க சுற்றுச்சுவர் அமைக்க தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் மீனவர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றிய அரசு அதிமுக அரசு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவே சேலம் தலைவாசலில் கால்நடை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தலைவாசலில் நடந்த கால்நடை பூங்கா விழா ஆடம்பர விழாவாக இல்லாமல் விவசாயிகளின் வாழ்வாதார நிகழ்ச்சியாக நடைபெற்றது.

நாட்டு மாடுகள், நாட்டு பசுக்கள், ஆடுகளை பாதுகாக்கவே தலைவாசலில் கால்நடை பூங்கா அமைகிறது. கலப்பின பசுக்கள் உருவாக்கப்பட்டதால் தற்போது 10 லிட்டர் பால் தரும் பசுக்கள் வருங்காலத்தில் 25 லிட்டர் அளவுக்கு பால் தரும். கால்நடை தீவன விதை உற்பத்தி பிரிவு ரூ. 1.49 கோடியில் நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி ஆராச்சி நிலையத்தில் நிறுவப்படும் என்று அவர் தகவல் அளித்துள்ளார்.

மேலும் விலங்கு வழி பரவும் நோய் அறிவகம் ரூ.2.58 கோடியில் கால்நடை மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி நிலையம் ஒரத்தநாட்டில் நிறுவப்படும் என்றும் பசு தீவனம் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்ய தீவனச்சோளம் ரூ. 21 கோடியில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.