இவ்வளவு பணத்தை எப்படி கட்டுவேன்….? கருப்பு துணி கட்டி போராடிய பெண்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

கண்ணில் கருப்பு துணி கட்டி பெண் தனது மகனுடன் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓவேலி பாரதி நகரில் ஜெகதீஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்ட கணவரின் மருத்துவ செலவுக்காக கூடலூரில் இருக்கும் கூட்டுறவு வங்கியில் ஜெகதீஸ்வரி 43 கிராம் தங்க நகையை அடகு வைத்து 89 ஆயிரம் ரூபாயை கடன் வாங்கியுள்ளார். இதற்கு மாதந்தோறும் வட்டி செலுத்தியுள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் இருக்கும் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை தங்க நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அரசு அறிவித்திருந்தது.

அந்த அறிவிப்பின் படி தங்க நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என எதிர்பார்த்து கடந்த 6 மாதங்களாக ஜெகதீஸ்வரி வட்டி பணம் கட்டாமல் இருந்துள்ளார். ஆனால் வங்கி நிர்வாகத்தினர் ஜெகதீஸ்வரியை தொடர்பு கொண்டு 9 ஆயிரம் ரூபாய் வட்டி பணத்தை செலுத்த வேண்டுமென தெரிவித்துள்ளனர். இதனால் நகை கடன் தள்ளுபடி செய்யாமல் இருப்பதை அறிந்து ஜெகதீஸ்வரி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கேட்ட போது 3 கிராம் கூடுதலாக இருப்பதால் நகை கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என வங்கி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஜெகதீஸ்வரி தனது மகள் நிதீஷ் குமாருடன் தரையில் அமர்ந்து கண்ணில் கருப்பு துணி கட்டி திடீரென தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மோகன் தாஸ் போன்றோர் அங்கு விரைந்து சென்று ஜெகதீஸ்வரியிடம் உயர் அதிகாரிகளை சந்திக்குமாறு தெரிவித்துள்ளனர். இது குறித்து ஜெகதீஸ்வரி கூறும் போது வங்கி நிர்வாகத்தினர் முன்னதாகவே உங்களது நகை கடனை தள்ளுபடி செய்யவில்லை என தெரிவித்திருந்தால் நான் முறையாக வட்டியை செலுத்தியிருப்பேன்.

இப்போது 9 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என கூறினால் கூலி வேலைக்கு செல்லும் நான் அவ்வளவு பணத்தை எப்படி கட்ட முடியும் என கண்ணீருடன் தெரிவித்துள்ளார். அதற்கு ஆர்.டி.ஓ-விடம் இது தொடர்பாக மனு அளித்தால் உங்களது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என தெரிவித்த பிறகு ஜெகதீஸ்வரி போராட்டத்தை கைவிட்டு தனது மகனுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *