குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள உத்திரமேரூர் பகுதியில் ஜெயக்குமார்-காமாட்சி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கல்லூரியில் படித்துவரும் 1 மகனும், 11-ஆம் வகுப்பு படித்து வரும் 1 மகளும் உள்ளனர். இந்நிலையில் ஜெயக்குமார் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வந்து காமாட்சியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்த காமாட்சி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக உத்தரமேரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி காமாட்சி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காமாட்சியின் தந்தை சண்முகம் உத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.