சேறும் சகதியுமான சாலையை சீரமைக்கக்கோரி பெண்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் சாலை மற்றும் வடிகால் வசதி இல்லாததால் சமீபத்தில் பெய்த கன மழையால் அப்பகுதி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கின்றது. மேலும் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் அப்பகுதி பெண்கள் சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் நேரில் வந்து பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.