குருப் 4 தேர்வில் முறைகேடு உறுதி: 39 தேர்வர்கள் பட்டியல் நாளை வெளியீடு

குரூப் 4 தேர்வில் முறைகேடான வழியில் முதல் 100 தரவரிசையில் இடம்பெற்ற 39 தேர்வர்களுக்குப் பதிலாக புதிய தேர்வர்களை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைப்பது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நாளை அறிவிப்பு வெளியிட உள்ளது.

குரூப் 4 தேர்வில் கீழக்கரை, ராமேஸ்வரம் ஆகிய இரு தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 39 தேர்வர்கள் முதல் 100 தரவரிசையில் முறைகேடான வழியில் இடம்பெற்றது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் 99 தேர்வர்கள், இடைத்தரகர்கள் மூலம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தரவரிசைப் பட்டியலிலிருந்து அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டத்துடன், அவர்களை வாழ்நாள் முழுவதும் டிஎன்பிஎஸ்சி நடத்தும் எந்த ஒரு தேர்விலும் பங்கேற்பதற்கு டிஎன்பிஎஸ்சி தடைவிதித்துள்ளது. இந்நிலையில், முறைகேடான வழியில் தரவரிசையில் முன்னிலை பெற்ற 39 தேர்வர்களுக்குப் பதில், புதிய தரவரிசைப் பட்டியலை முதல்கட்டமாக டிஎன்பிஎஸ்சி நாளை வெளியிடயிருக்கின்றது.

அதனைத் தொடர்ந்து முறைகேடு குற்றச்சாட்டிற்கு உட்பட்டவர்கள், மற்ற 39 நபர்கள் ஆகியோருக்குப்பதில் தரவரிசைப்பட்டியல் அடுத்து உள்ளவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட உள்ளனர். அவர்களின் பட்டியலை நாளை டிஎன்பிஎஸ்சி வெளியிடும் என்று தெரிகிறது. குரூப் 4 தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஏற்கனவே வெளியிட்ட தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் அழைக்கப்படுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *