இதை இடிக்க கூடாது…. பொதுமக்கள் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

 பள்ளிக்கூடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் இருந்து கடலூர் மாவட்டம் வழியாக தஞ்சாவூர் வரை இருக்கும் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இம்மாவட்ட காட்டுமன்னார்கோவில் அருகே வானமாதேவி கிராமத்தில் தற்போது விரிவாக்கப் பணிக்காக கட்டிடங்களை அகற்றும் பணி நடைபெற்றுள்ளது. இதனையடுத்து அங்குள்ள முத்துமாரியம்மன் கோவில் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை அகற்ற அதிகாரிகள் முயற்சி செய்த நிலையில் அப்பகுதி மக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதில் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. பின்னர் முத்துமாரி அம்மன் கோவிலையும் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியையும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொக்லைன்  எயந்திரம் மூலமாக இடிக்க முயற்சி செய்துள்ளனர். இதை அறிந்த கிராம மக்கள் கோவில் அருகில் ஒன்று திரண்டு பள்ளிக்கூடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த துணை காவல்துறை சூப்பிரண்டு சுந்தரம், அதிகாரிகள் மற்றும் நில எடுப்பு தாசில்தார் கோமதி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அதிகாரிகள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை அகற்றுவது தொடர்பாக 15 நாட்களுக்கு பின் நடவடிக்கை எடுப்பதாகவும், தற்போது முத்துமாரியம்மன் கோவிலை மட்டும் இடிக்க போவதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து இவற்றிற்கு சம்மதம் தெரிவித்த கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் முத்துமாரியம்மன் கோவில் பொக்லைன் எந்திரம் மூலமாக இடித்து அகற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *