பட்லரா…… அஷ்வினா …. KXIP V RR பலப்பரீட்சை…!!

இன்றைய ஐ.பி.எல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ்   அணிகள் மோதுகின்றன  

2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 32 வது லீக் போட்டியில் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ரஹானே  தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்  அணியும் மோதுகின்றன. இப்போட்டி பஞ்சாப் மொஹாலி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. பஞ்சாப் அணி இந்த சீசனில் இதுவரை 8 போட்டிகள் விளையாடி 4 வெற்றி, 4 தோல்வியுடன்  8 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி கடந்த இரண்டு போட்டிகளில் பெங்களூரு, மும்பை அணிகளிடம் தோற்றது.

மும்பைக்கு  அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 197  ரன்கள் குவித்தது. அந்த அணியில் கே.எல் 100, கிறிஸ் கெய்ல் 63 ரன்களும் விளாசினர். அதே போல் பெங்களூருக்கு எதிரான போட்டியிலும் பஞ்சாப் அணி  173 ரன்கள் குவித்தது. இரண்டு ஆட்டங்களிலும் வலுவான ஸ்கோர் எடுத்தாலும் முன்னணி பந்து வீச்சாளர்களின் நிலையற்ற பந்து வீச்சால் ரன்களை விட்டுக்கொடுத்து  தோல்வியை தழுவியது. எனவே அதனை சரி செய்து பஞ்சாப் அணி வெல்லும் முனைப்பில் களமிறங்க உள்ளது.

ராஜஸ்தான் அணி இந்த சீசனில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது. கடந்த போட்டியில் மும்பைக்கு  எதிரான ஆட்டத்தில் 188 ரன்கள் இலக்கை ராஜஸ்தான் அணி சேஸ் செய்தது. அந்த அணியில் ஜாஸ் பட்லர் 89 ரன்கள் எடுத்து  வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். ரஹானேவும், சாம்சனும் அவருக்கு கை கொடுத்தனர். இந்த வெற்றியினால் அந்த அணி புத்துணர்ச்சி பெற்றிருக்கும். காயம் காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத பென் ஸ்டோக்ஸ் இந்த போட்டியில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் வருகையால் அந்த அணி கூடுதல் பலம் பெறும். பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் தொடர் தோல்வியில் இருந்து விடுபட பஞ்சாப் அணியும் முயற்சி செய்யும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. இரண்டு அணிகளும் ஒட்டு மொத்தமாக இதுவரை 18 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் பஞ்சாப் அணி 8 வெற்றியும், ராஜஸ்தான் அணி 10 வெற்றியும் பெற்றுள்ளது  குறிப்பிடத்தக்கது.