கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக வாய் பேச முடியாத பிஞ்சு குழந்தை அடித்து உதைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 30 வயதான ரமேஷ் கூலி வேலை செய்துவரும் இவர் 4 ஆண்டுகளுக்கு முன் 25 வயதான பவானியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 4 வயதில் யாலினி என்ற மகளும் ,ஒன்றரை வயதில் ஒரு மகனும் உள்ளார். இந்த நிலையில் ஓராண்டுக்கு முன் ரமேஷ் காச நோயால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து 5 மாதங்களுக்கு முன் கணவனைப் பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய பவானி , மணலில் தனியாக வசித்து வந்தார்.அப்போது அந்த ஊரைச் சேர்ந்த 24 வயதான ஆசிப் என்பவருடன் பவானிக்கு பழக்கம் ஏற்பட்டது. இரண்டு குழந்தைகளுடன் தனியாக இருந்த பவானியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறியுள்ளார் ஆசிப்.

இதையடுத்து அவர்கள் இருவரும் புழல் பகுதியில் உள்ள வீட்டில் குடியேறினர். இந்நிலையில் திங்கட்கிழமை சிறுமிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி புழல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார் பவானி. அங்கு யாழினியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த தகவலை கணவர் ரமேஷ் தெரிய வந்ததும் அவர் மருத்துவமனைக்கு சென்று பார்த்தார். அப்போது யாழினியின் உடலில் காயம் இருந்தது இதையடுத்து சந்தேகம் அடைந்த ரமேஷ் புழல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் குழந்தை மரணம் குறித்து பவானி , ஆசிப் ஆகியோரிடம் புழல் போலீசார் விசாரித்தனர்.
போலீஸ் விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.இதில் பவானியுடன் ஆசிப் தனிமையில் இருக்கும் போது வாய் பேச முடியாத சிறுமி யாழினி அவ்வப்போது தொந்தரவு செய்துள்ளார். இதனால் உல்லாசத்துக்கு தடையாக இருப்பதாக நினைத்து சிறுமியை சிகரெட்டால் சூடு வைத்து அடித்து துன்புறுத்தியுள்ளார் ஆசிப். ஆதரவற்ற நிலையில் ஆசிப்_பிடம் அடைக்கலம் அடைந்ததால் அதை தட்டி கேட்க முடியாத நிலையில் பவானி இருந்துள்ளார்.
இந்நிலையில் திங்கட்கிழமை இரண்டாவது குழந்தையுடன் கடைக்குச் சென்றுவிட்டு பவானி வீடு திரும்பியுள்ளார். அப்போது சிறுமி யாழினியை ஆசிப் அடித்து துன்புறுத்தி எட்டி உதைத்துள்ளார். இதில் சிறுமி மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது .