சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து லாரி மோதி உயிரிழந்த குடும்பத்தினருக்கு கமல் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) கடந்த 12ம் தேதி பள்ளிக்கரணை வழியாக சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் இருந்த அதிமுக பேனர் ஒன்று அவர் மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள இல்லத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து மக்கள் நீதி மைய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல் தெரிவித்துள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பேனர் வைத்த குற்றவாளி அதிக நாட்கள் ஓடி ஒளிய முடியாது. பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். அப்படி ஒழிக்கவில்லை என்றால் மக்கள் ஒழிப்பார்கள். பேனர் கலாசாரத்தை ஒழிக்க மக்களுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியும் துணை நிற்கும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். முன்னதாக கமல்ஹாசன் 30 ஆண்டுகளுக்கு முன்பே ரசிகர்கள் பேனர் வைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.