ஓட ஓட விரட்டி கொட்டிய தேனீக்கள்….. பள்ளி மாணவர்கள் உள்பட 26 பேர் மயக்கம்…. போலீஸ் விசாரணை….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மேலூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில், மாணவர்கள் நேற்று வழக்கமாக வகுப்பறையில் படித்து கொண்டிருந்தபோது பள்ளி வளாகத்தில் உள்ள புளிய மரத்தில் இருந்து திடீரென தேனீக்கள் பறந்து வந்துள்ளது. பின்னர் வகுப்பில் உள்ள மாணவர்களை விரட்டி, விரட்டி கொட்டிய தேனீக்கள், அதே வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இருந்த அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் மற்றும் பள்ளி அருகே நின்று கொண்டிருந்தவா்களையும் கொட்டியுள்ளன.

இதனால் அப்பகுதியில் இருந்தவர்கள் அனைவரும் சிதறி ஓடிய நிலையில், இந்த தேனீக்கள் கொட்டியதில் அரசு பள்ளியில் படிக்கும் சின்னதுரை மகன் பவின், வெங்கடேசன் மகன் தினேஷ், சின்னத்தம்பி மகன் பலராமன் உள்ளிட்ட 13 மாணவ, மாணவிகள், மேலும் 3 அங்கன்வாடி குழந்தைகள், அங்கன்வாடி பணியாளர், அங்கன்வாடி உதவியாளர் மற்றும் பொதுமக்கள் என 26 பேர் மயக்க நிலையை அடைந்தனர்.

இதனையடுத்து இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். இதில் 3 அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் 13 அரசு பள்ளி மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மாலையில் மாணவர்கள் அனைவரும் வீடு திரும்பினர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள், அந்த பள்ளி வளாகத்தில் உள்ள புளிய மரத்தில் இருந்த தேனீக்களை அழித்தனர். எனினும் இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.