விழுப்புரத்தில் 8 வயது சிறுவன் கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மாருதி நகரைச் சேர்ந்தவர் ஜான் பால் என்பவர். இவருக்கு 40 வயதாகிறது. அரசு பள்ளியில் ஆசிரியராக இவர் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மேரி ஜேஸ்மின்(35) கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றுகிறார். இவர்களுக்கு 8 வயதுடைய ரெமி எட்வின் எனும் மகன் இருந்துள்ளார். ரெமி எட்வின் தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
நேற்று மாலை ரெமி எட்வின் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதனால் பதட்டமடைந்த அவரது பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் தேடத் தொடங்கினர். ஆனால் அவன் கிடைக்கவில்லை. அவர்களது வீட்டின் அருகில் புதிதாக ஒரு கட்டடம் இருந்தது. நேற்று இரவு அங்கு சென்று பார்த்தனர். தரை மட்டத்திலிருந்து சுமார் 10 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டிருந்த கழிவுநீர் தொட்டியில் ரெமி எட்வின் சடலமாக இருப்பதைக் கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து மிகவும் கதறி அழுதனர்.
இதைத் தொடர்ந்து. வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரெமி எட்வின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 8 வயதுடைய சிறுவன் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.