விளையாடிக்கொண்டிருந்த குழந்தை…! வீட்டிற்கு அருகே பறி போன உயிர் … பதறிய பெற்றோர்கள் …!!

கழிவு நீர் கால்வாயில் விழுந்து 5 வயது  சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் பிரேம்குமார்-நளினி. இத்தம்பதியினருக்கு 5 வயதில் யஸ்வந்த் என்ற மகன் உள்ளார். யஸ்வந்த் நேற்று மாலையில் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு திறந்து கிடந்த கழிவுநீர் கால்வாயில் எதிர்பாராதவிதமாக சிறுவன் தவறி விழுந்தான். இதனை அக்கம்பக்கத்தினர் யாரும் பார்க்கவில்லை என்று தெரிகிறது. கால்வாயில் தவறி விழுந்த சிறுவன் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்நிலையில் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை நீண்ட நேரமாக காணவில்லை என்று பெற்றோர்கள் தேடியுள்ளனர். எங்கு தேடியும்  சிறுவன் கிடைக்காததால்  யஸ்வந்தின் பெற்றோர் பதறியுள்ளனர். இதனிடையே வீட்டிற்கு அருகே உள்ள ஐந்து அடி ஆழம் உள்ள சாக்கடையில் சிறுவன் இறந்து கிடந்தது  தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யஸ்வந்த்தின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும்  சிறுவனின் தாய் நளினி கால்வாயை  மூடாமல் இருந்த மாநகராட்சியின் அலட்சியத்தாலயே  தனது மகன் உயிரிழந்தான் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.