அதிமுக – பாமக இடையே வார்த்தை போர் முற்றிவரும் நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிர்வாகி வழக்கறிஞர் பாலு, கூட்டணி தொடர்பான முடிவை தேர்தல் தொடங்குவதற்கு ஆறு மாதத்திற்கு முன்பாக நாங்கள் எடுப்போம். அதுதான் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது.  எனவே கூட்டணி குறித்து முடிவெடுக்கக்கூடிய தருணமும் சூழலும் இது அல்ல.

எங்களுடைய பயணம் என்பது தொடரும். எங்களுடைய கட்சியை பலப்படுத்துவதும், தமிழ்நாட்டு மக்களுடைய அடிப்படை தேவைகளை ஆட்சியாளர்களிடமிருந்து பெறுவதும், மக்களுடைய தேவைகளை கவனத்தில் கொண்டு செல்லக்கூடிய பணிகளை நாங்கள் தொடர்ந்து செய்வோம்.

அன்புமணி ராமதாஸ் அவர்கள் மிக கவனமாக கருத்துக்களை எடுத்து வைத்தார். எனவே இது திட்டமிட்டு ஒரு கட்சி மீது குறை சொல்ல வேண்டும் என்ற அடிப்படையில் சொல்லப்பட்டது அல்ல என்பதை பெரும்பான்மையான அண்ணா திமுகவினர் புரிந்து கொள்வார்கள்.

உயிரற்று இருந்த அதிமுகவினருக்கு உயிரூட்ட கூடியவர்களாக பாட்டாளி மக்கள் கட்சியினர் விளங்கி இருக்கின்றோம். 98ல் நாங்கள் முடிவெடுக்கவில்லை என்று சொன்னால்  மிகப்பெரிய ஒரு சரிவை அண்ணா திமுக சந்தித்திருக்கும். அதேபோன்றுதான் 2001 இல் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் வழி மேல் விழி வைத்து எங்கள் மருத்துவர் ஐயா அவருக்காக காத்திருந்தார்கள்.

அதற்குப் பிறகு ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தது. நாங்கள் ஒருபோதும் எங்களால் தான் நீங்கள் ஜெயலலிதா முதலமைச்சரானார், எங்களால்தான் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இரண்டு ஆண்டு காலம் முதலமைச்சராக தொடர்வதற்கு காரணமாக இருந்தோம். ஜெயக்குமார் அவர்கள் அமைச்சராக இரண்டு ஆண்டு காலம் தொடர்வதற்கு பாட்டாளி மக்கள் கட்சி தான் காரணம் என்று நாங்கள் ஒருபோதும் சொல்வதில்லை, அது எங்களுடைய வேலையும் அல்ல என தெரிவித்தார்.