கவலைப்படமாட்டோம்… “நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம்”… இஸ்ரோ உறுதி!!

பின்னடைவு குறித்து கவலைப்படாமல் நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம் என்று இஸ்ரோ உறுதியாக தெரிவித்துள்ளது.

சந்திரயான் 2 திட்டத்தின்படி இன்று அதிகாலை விக்ரம் லேண்டர் தரையிறங்கும் என ஒட்டு மொத்த இந்தியாவும் காத்திருந்தது.  நிலவின் தென் துருவ பகுதியில் எந்த ஒரு நாடும் இதுவரை லேண்டரை தரையிறக்கியதில்லை என்பதால்  பிரதமர் மோடி  இஸ்ரோ மையத்திற்கு  ஆர்வமுடன் இதனை காண வந்திருந்தார். ஆனால் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 கிமீ தூரத்தில் இருக்கும்போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு சிக்னல் கிடைக்கவில்லை. இஸ்ரோ திட்டமிட்டபடி தரையிறங்க முடியாததால் சோகத்தில் இருந்த  இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறி ஊக்கமளித்தார்.

Image result for Chandrayaan-2 isro

இந்நிலையில் இஸ்ரோ, தற்போதைய பின்னடைவு குறித்து கவலைப்படாமல் நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம் என்று உறுதியாக தெரிவித்துள்ளது. சந்திரயான்-2 திட்டத்தின் நோக்கத்தில் 90 முதல் 95 சதவீத பணிகளை எட்டிவிட்டோம். முந்தைய திட்டங்களை ஒப்பிடும்போது சந்திரயான்-2-ல் மிகப்பெரிய தொழில்நுட்ப முன்னேற்றத்தை அடைந்துள்ளோம். நிலவின் சுற்றுவட்டப்பாதையில் திட்டமிட்டபடி ஆர்பிட்டர் சுற்றிக்கொண்டு வருகிறது. ஆர்பிட்டரில் உள்ள அதிநவீன கேமரா மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் பெரும் பயனுள்ளதாக அமையும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.