கொட்டி கிடந்த இறைச்சி கழிவுகள்…. சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

நோய் பரப்பும் வகையில் இறைச்சி கழிவுகளை கொட்டிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தேனி மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.ஆர். நகரில் மாவட்ட வன அலுவலர் அலுவலகம் அருகில் சிலர் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டி செல்வதால் அங்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் சென்றுள்ளது. அந்தப் புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் அப்பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது மாவட்ட ஆட்சியர் நகராட்சி அதிகாரிகளிடம் இறைச்சிக் கழிவுகளை கொட்டியது யார் எனவும், கொட்டிய நபர்களை உடனடியாக கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் கொட்டப்பட்ட கழிவுகளை முழுமையாக அகற்றி விட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதன்பின் மாவட்ட ஆட்சியர் தேனி அல்லிநகரம், போடி நகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து சில்லமரத்துப்பட்டி, போ.அம்மாபட்டி, டொம்புச்சேரி, காமராஜபுரம் ஆகிய பகுதிகளில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்பார்வையிட்டார்.

மேலும் மாவட்ட ஆட்சியர் தாலுகா அலுவலகம், போடிப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகளிலும் ஆய்வு செய்தார். அந்த ஆய்வின் போது மாவட்ட வன அலுவலர் வித்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, நகராட்சி ஆணையாளர்கள் சுப்பையா, ஷகிலா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *