சேலத்தில் தற்காலிக இறைச்சி கடைகள்… வாங்குவதற்கு திரண்ட மக்கள்..!!

சேலம் அருகே இறைச்சி, மீன்கள், வாங்குவதற்கு தற்காலிகமாக அமைக்கப்பட்ட கடைகளில் மக்கள் வாங்குவதற்கு திரண்டனர்.

வேகமாக பரவி வரும் கோரனோவை கட்டுப்படுத்துவதற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  காய்கறி மற்றும் மளிகை கடைகளில் பொது மக்கள் சமூக இடைவெளி விட்டு நின்று பொருட்கள் வாங்கி செல்லுங்கள் என அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் நெரிசல் அதிகமாக காணப்பட்டது. அதனால் கொரோனா வைரஸ் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதிகளில் இயங்கும் இறைச்சி மற்றும் மீன் கடைகள் அனைத்தும் மாநகராட்சி பகுதிக்குள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் செயல்படுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

அதற்கு பதிலாக ஓமலூர் செல்லும் சாலையில் அரபி கல்லூரி அருகில் விசாலமான இடத்தில் தற்காலிகமாக கடைகள் அமைத்து இறைச்சி, மீன்களை விற்பனை செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அங்கு தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் மூலம் செய்து கொடுக்கப்பட்டது.

இதனிடையே, சேலத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதால் இறைச்சி, மீன் வியாபாரம் செய்யும் சிலர் அங்கு செல்ல மாட்டோம் என்றும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வருகிற 15-ந் தேதி வரை இறைச்சி கடைகளை திறப்பதில்லை என்றும் அறிவித்திருந்தனர்.

இந்தநிலையில், யாரும் எதிர்பாராத வகையில் சேலம் அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்ட கடைகளில் நேற்று காலை 6 மணிக்கு இறைச்சி, மீன்களை வாங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு கூட்டம் அலைமோதியது. அங்கு 40-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

பின்னர் இறைச்சி மற்றும் மீன்களை வாங்க வந்த பொதுமக்களுக்கு உடல் வெப்ப நிலையை அறியக்கூடிய தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் கைகளை நன்றாக கழுவிய பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து பொதுமக்கள் சமூக இடைவெளியில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆடு மற்றும் கோழி இறைச்சிகளையும், மீன்களையும் வாங்கி சென்றனர். இதனிடையே, அரபிக்கல்லூரி அருகில் அமைக்கப்பட்டுள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளில் நேற்று மாவட்ட கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *