“இந்தியாவிலேயே நம் மாநிலத்தில் தான் இது முதன்முறை”….. பெருமிதமாக கூறிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்….!!!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு, இரும்பு பெண்மணி திட்டம் மற்றும் பிரதமர் ஆவாஸ் பிளஸ் திட்டத்தின் கீழ் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மேகநாதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அதன் பிறகு 250 கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி தொடங்கி வைத்த அமைச்சர், கர்ப்ப காலத்தில் கடைபிடிக்க வேண்டிய விழிப்புணர்வு கையேடுடன் கூடிய சீதனப்பொருட்களை வழங்கினார். அதனை தொடர்ந்து பிரதமர் ஆவாஸ் பிளஸ் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச வீட்டுமனை பட்டா 133 பயனாளிகளுக்கு, இலவச வீட்டு மனை திட்டத்தின் கீழ் 72 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாவும் வழங்கினார்.

மேலும் இந்தியாவிலேயே முதல்முறையாக கர்ப்ப காலத்தில் இரும்பு சத்து குறைபாட்டை நீக்க சிறப்பு திட்டமான இரும்பு பெண்மணி திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், பெண்களின் வாழ்வில் 10 மாத கர்ப்ப காலம் மிகவும் முக்கிய காலமாகும். தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் சமுதாய வளைகாப்பு நடைபெறுகிறது. பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பது முக்கியமில்லை. பெண்கள் ஆண்களை விட திறமைசாலிகளாக தான் இருக்கிறார்கள். அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னனியில் இருக்கிறார்கள். கர்ப்ப காலத்தில் இரத்த சோகை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காகத்தான் இரும்பு பெண்மணி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எனவே ரத்த சோகையை போக்க கொடுக்கும் இரும்பு சத்து நிறைந்த பொருட்களை தவறாமல் உண்ண வேண்டும். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு இப்பொருள்கள் வழங்கப்படும். மேலும் தமிழகத்தில் வருங்காலத்தில் பிறக்கும் குழந்தைகள் நல்ல சத்தான, அறிவான, ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்து சமுதாய பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.