இலங்கை அணி 39.4 ஓவரில் 215 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது இலங்கை அணி. இதில் இரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று முன் தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில்  இலங்கையை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.

இந்நிலையில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் மதியம் 1:30 மணிக்கு நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இரு அணியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்திய அணியில் வலது தோள்பட்டையில் ஏற்பட்ட வலி காரணமாக யுஸ்வேந்திர சாஹல் தேர்வு செய்யப்படவில்லை. அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல இலங்கை அணியில் நிசாங்கா மற்றும் மதுசங்கா ஆகியோருக்கு பதிலாக நுவனிது பெர்னாண்டோ மற்றும் லகிறு குமாரா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்..

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி இலங்கை அணியின் துவக்க வீரர்களாக அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் நுவனிது பெர்னான்டோ இருவரும் களமிறங்கினர். இதில் அவிஷ்கா  பெர்னான்டோ 20 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். இதையடுத்து  குஷால் மெண்டிஸ் – நுவனிது பெர்னான்டோ இருவரும் ஜோடி சேர்ந்து நல்ல துவக்கம் கொடுத்தனர்.  பின் குல்தீப் ஓவரில் குஷால் மெண்டிஸ் 34 ரன்களில் அவுட் ஆக,  அடுத்து வந்த தனஞ்செய டி சில்வா(0) அக்சர் படேல் ஓவரில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.

அதை தொடர்ந்து நன்கு ஆடிவந்த துவக்க வீரர் நுவனிது பெர்னான்டோ (50) அரைசதம் கடந்த நிலையில் அவுட் ஆனார்.. பின் வந்த கேப்டன் ஷானகா 2, அசலங்கா 15, ஹசராங்கா 21, என அடுத்தடுத்து அவுட் ஆக சரிவை சந்தித்தது இலங்கை. மேலும் கடைசியில் ஓரளவு தாக்குப்பிடித்த வெல்லலகே 32, கருணாரத்னே 17, குமாரா 0  என அவுட் ஆகினர். இறுதியில் இலங்கை அணி 39.4 ஓவரில் 215 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரஜிதா 17 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.. இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.