ரோஹித் கில் இருவரின் நல்ல தொடக்கத்தால் இந்திய அணி 25 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 185 ரன்கள் குவித்து ஆடி வருகிறது.

இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 3:1 என்ற கணக்கில் இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் இருக்கும் பர்சபரா ஸ்டேடியத்தில் மதியம் 1:30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இலங்கைக்கு எதிரான முதல் டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா, கோலி, கேஎல் ராகுல்  ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளனர்.

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷானகா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கில் பவுண்டரியாக அடித்து அதிரடி தொடக்கத்தை கொடுக்க, அதன்பின் ரோகித் சர்மாவும் வான வேடிக்கையை காட்ட ஆரம்பித்தார். குறிப்பாக ரஜிதா வீசிய 7ஆவது ஓவரில் ரோஹித் சர்மா 2 சிக்ஸ் ஒரு பவுண்டரி என அடித்து மிரட்டினார். தொடர்ந்து இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். அதன்பின் ரோகித் சர்மா அரை சதம் கடந்தார். அதேபோல சுப்மன் கில்லும் அரைசதம் அடித்து அசத்தினார். இந்திய அணி விக்கெட் இழக்காமல் 100 ரன்களை கடந்தது.

பின் சானகாவின் 20ஆவது ஓவரில் கில் 60 பந்துகளில் (11 பவுண்டரி) 70 ரன்கள் எடுத்த நிலையில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். இதையடுத்து விராட் கோலி – ரோஹித் சர்மா இணைந்து ஆடினர். காயத்திலிருந்து மீண்டு வந்த ரோகித் சர்மா சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மதுஷாங்கா வீசிய 24ஆவது ஓவரின் முதல் போல்ட் ஆகி ஆட்டமிழந்தார். ரோஹித் 67 பந்துகளில் 9  பவுண்டரி 3 சிக்ஸர் உடன் 83  ரன்கள் எடுத்தார். தற்போது விராட் கோலி 24 ரன்களுடனும், ஷ்ரேயஸ் ஐயர் ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இந்திய அணி 25 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 185 ரன்கள் குவித்து ஆடி வருகிறது.