இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது இலங்கை அணி. இதில் இரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று முன் தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 373 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 87 பந்துகளில் 113 ரன்கள் விளாசினார். மேலும் துவக்க வீரர்களாக களம் இறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா, கில் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
பின்னர் ஆடிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 306 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் இலங்கையை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இலங்கை அணி தோல்வி அடைந்தாலும் கூட அந்த அணியின் கேப்டன் சானகா 88 பந்துகளில் 108 ரன்கள் குவித்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் வென்றதன் மூலம் 1:0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் மதியம் 1:30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றாலும் கூட கடைசி நேரத்தில் பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கினர். குறிப்பாக சமி கடைசி கட்டத்தில் ரன்களை விட்டுக் கொடுத்தார். அதேபோல உம்ரான் மாலிக் தொடக்கத்தில் நன்றாக வீசி 3 விக்கெட் எடுத்த போதிலும், கடைசியில் சற்று ரன்களை கசிய விட்டார். எனவே பந்துவீச்சில் சற்று முன்னேற்றம் காண வேண்டி உள்ளது. அதே சமயம் இலங்கை அணியில் கேப்டன் மட்டுமே தனி ஆளாக போராடுகிறார். அவருக்கு பக்கபலமாக இந்த போட்டியில் ஒத்துழைப்பு கொடுத்தால் இந்திய அணிக்கு சவால் விட வாய்ப்புள்ளது. அதேபோல இலங்கை அணியில் பந்துவீச்சும் கடந்த போட்டியில் சுமாராகவே இருந்தது. அதனை சரி செய்யும் பட்சத்தில் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம்.
இந்தியா கணிக்கப்பட்ட லெவன் :
ரோஹித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல்.
இலங்கை கணிக்கப்பட்ட லெவன் :
பதும்நிஷாங்கா, குசல் மெண்டிஸ்(வி.கீ), அவிஷ்க பெர்னாண்டோ, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, தசுன் ஷானகா (கே), வனிந்து ஹசரங்கா, சாமிக்க கருணாரத்னே, துனித் வெல்லலகே, கசுன் ரஜிதா, டில்ஷான் மதுஷங்கா.