#INDvsBAN : காயத்தால் விலகிய ஷமி…. 150 கி.மீட்டர் வேகப்பந்து வீச்சாளரை களமிறக்கிய பிசிசிஐ..!!

இந்திய ஒருநாள் அணியில் முகமது ஷமிக்கு பதிலாக உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி டி20 தொடரை 1:0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன் பின் ஷிகர் தவான் தலைமையிலான  இந்திய அணி 1:0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை நியூசிலாந்திடம் இழந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.

நியூசிலாந்து தொடரில் ஓய்வளிக்கப்பட்ட மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, கோலி ஆகியோர் இந்த தொடரில் இடம் பிடித்தனர். ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணியும், நாளை மிர்பூரில் மோதுகிறது.. இதற்காக வங்கதேசம் சென்றுள்ள இந்திய வீரர்கள் அனைவரும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது முகமது ஷமிக்கு காயமடைந்ததால் அவர் ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார்.. இந்நிலையில் ஷமிக்கு பதிலாக உம்ரான் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பயிற்சியின் போது வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தோள்பட்டையில் காயம் அடைந்தார். அவர் தற்போது பெங்களூருவில் உள்ள என்சிஏவில் பிசிசிஐ மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் உள்ளார், மேலும் அவர் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க முடியாது. அகில இந்திய மூத்த தேர்வுக் குழு ஷமிக்கு பதிலாக உம்ரான் மாலிக்கை நியமித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி :

ரோஹித் சர்மா (கே), கே.எல். ராகுல் (து.கே), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த் (WK), இஷான் கிஷன் (WK), ஷாபாஸ் அகமது, அக்சர் படேல் , வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.