இந்தியன் 2 விபத்து – படப்பிடிப்பு தளத்தில் நேரில் ஆஜராகி இயக்குனர் சங்கர் விளக்கம்!

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் எப்படி விபத்து நடந்தது என்பது குறித்து செய்து காட்ட ஈவிபி பிலிம் சிட்டியில் இயக்குநர் ஷங்கர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

கமல் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் படம் இந்தியன் 2. இந்தப் படத்தை லைகா புரடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப்படத்தின் ஷுட்டிங் சென்னை நசரத்பேட்டை அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த மாதம் 19ம் தேதி இரவு இந்தியன் 2 படப்பிடிப்பு திடீரென கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

இதில் உதவி இயக்குனர் கிருஷ்ணா உட்பட 3 உயிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக இந்த வழக்கில் புரொடக்ஷன் மேனேஜர் , லைகா நிறுவனம் , ஆபரேட்டர் , கிரேன் உரிமையாளர் என 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையர் நாகஜோதி தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் அளித்த வாக்கு மூலத்தின் படி இயக்குனர் ஷங்கர் மற்றும் கமலஹாசனிடம் விபத்து நிகழ்ந்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட 24 பேர் விபத்து நடந்த படப்பிடிப்பு தளத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தனர்.

இதில் நடிகர் கமல்ஹாசன் படப்பிடிப்பு தளத்தில் நேரில் ஆஜராக விலக்கு அளித்து சென்னை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட மற்றவர்கள் இன்று விபத்து நடந்த படப்பிடிப்பு தளத்தில் இன்று நேரில் ஆஜராகியுள்ளனர். அவர்களிடம் விபத்து எவ்வாறு நடந்தது? என்று துணை கமிஷனர் நாகஜோதி தலைமையிலான மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.